Virumthombal – A Tamil Story

விருந்தோம்பல் = Hospitality

இல்லறமே நல்லறம்:   

     “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது”, என்று ஔவையார் சொல்கிறார்.  அப்படி அரிதாகக் கிடைக்கப்பெற்ற இந்த மானிடப் பிறவியில்  நல்ல மனைவியும், மக்கட்செல்வமும் (குழந்தைகள்) வாய்க்கப் பெற்று,  அழகான முறையில் இல்லறம்   நடத்துபவர்களை விட பாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. 

     நேர் வழியில் உழைத்து அதன்மூலம்  பெற்ற செல்வத்தை  நான்கு பேருடன் பகிர்ந்து கொண்டு வாழ்வதற்குப் பெயர் தான் வாழ்க்கை. முன்னோர்கள், (Ancestors) சந்நியாசிகள், (Saints) விருந்தினர், (Guest) சுற்றத்தார், (Relatives) தனது குடும்பத்தார், அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது இல்லற வாழ்க்கையில் உள்ளவர்களது கடமை. 

திருவள்ளுவர்,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

என்று சொல்கிறார்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சண்டை சச்சரவு இல்லாமல் அன்புடன் வாழும் வாழ்க்கை தான் இல்லறத்திற்குப் பெருமை சேர்க்கும். அவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் நல்ல குணங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.  அந்த குழந்தைகள் இந்த நாட்டையே செழிப்பாக்கி விடுவார்கள் என்று திருவள்ளுவர் சொல்கிறார். இன்றைய குழந்தைகளின் கையில் தான் நாளைய உலகம் இருக்கிறது என்று சொல்வார்கள். அதனால் அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது பெற்றோர்களின் கடமை.

பெற்றோர்களின் கடமை :

     குழந்தைகள் சொல்லிக்கொடுத்துக் கற்றுக்கொள்வதைவிட, தாங்கள் பார்க்கும் விஷயங்களின் மூலம் தான் அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

     அதனால் நம் குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் நல்ல விஷயங்களை, முதலில் நாம் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு இன்னமும் வயதாகவில்லை. அதனால் அவர்கள் கொஞ்சம் வளர்ந்த உடன் நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.  செடியாக இருக்கும் போது வளைப்பது சுலபம். அதுவே மரமாக வளர்ந்து விட்டால் வளைக்க முடியாது.

இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள். அதனால் குழந்தைகளுக்கு ஐந்தில் இருந்தே நல்லப் பழக்கவழக்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

      சில குழந்தைகள் பெற்றோர்கள் பேசுவதை மட்டும் கேட்பதில்லை. பெற்றோர்கள் மற்றவர்களிடம் எப்படியெல்லாம் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள். நாம் நம் பெற்றோர்களிடம் கோபமாகவோ அல்லது மரியாதைக் குறைவாகவோ நடந்து கொண்டால், அதைப் பார்த்து நம் குழந்தைகள் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வார்கள். அதற்குப் பிறகு வாழ்நாள் முழுவதும், ‘நம் குழந்தைகள் பெரியவர்களை மதிப்பதில்லை’ என்று புலம்புகிற மாதிரி ஆகிவிடும்.

     எனவே எப்போதும் நாகரீகமான வார்த்தைகளையும், பண்பான விஷயங்களையும் மட்டுமே பேச வேண்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று சொல்வார்கள். அதைப்போல நம் குழந்தைகள் நாம் செய்வதை விட ஒரு படி அதிகமாகச் செய்வார்கள். அதனால் நாம் நல்லதையே பேச வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும். நம் குழந்தைகளின்  எதிர்காலம் நம் கையில் தான் இருக்கிறது.

“எந்தக்குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே”, என்று உடுமலை நாராயணக்கவி பாடி இருக்கிறார்.

பிள்ளைகளின் கடமை :

     அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்வார்கள். நாம் சுயமாக நம் காலில் நிற்கும் வரை, பெற்றோர்கள் தான் நம்மை தங்களுடைய அரவணைப்பில் வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்கள். அப்படி வளர்க்கப்பட்ட நாம், நம் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்று இருக்கிறது.

     “மகன் தந்தைக்குக்குஆற்றும் உதவி இவன்தந்தை எந்நோற்றான் கொல்எனும் சொல்”, என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

     அதாவது,  தன் மகனை அல்லது மகளைக் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக ஆக்குவதே தந்தையின் முதற்கடமையாகும். இவனைப் பெறுவதற்கு இவனுடையத் தந்தை எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அனைவராலும் பாராட்டப்படக்கூடிய தகுதியில் மகன் வளர்ந்து காட்ட வேண்டும். அது தான் பிறந்த நிமிடத்திலிருந்து தன்னை வளர்த்த தந்தைக்கு ஒரு மகன் காட்ட வேண்டிய நன்றி என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

     “ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”, என்ற திருக்குறளில், ‘தன் குழந்தைகளைப் பெற்ற போது ஒரு தாய் சந்தோஷப்பட்டதை விட அவர்களைப் பிறர் பாராட்டக் கேட்கும்பொழுது அதிகமாக சந்தோஷப்படுகிறாள்’, என்று சொல்கிறார்.

     அதனால் நன்றாகப்படித்து எல்லோராலும் பாராட்டப்படும் ஒரு தகுதியான வாழ்க்கையைக் குழந்தைகள் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் பெற்றோர்களுக்குக் குழந்தைகள் கொடுக்கும் சந்தோஷம். அந்த சந்தோஷத்தை இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடையப் பெற்றோர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்டக் குழந்தைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

     நான் என் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மகனாகவும், என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும் இருந்திருக்கிறேன். திருவள்ளுவர் சொல்லியது போல் எல்லா விதத்திலும் என்னை அனுசரித்துச் செல்லும் நல்ல மனைவியையும், நற்பண்புகள் நிறைந்த நல்ல குழந்தைகளையும் அடைந்த நான் பாக்கியசாலி. நல்ல வேலை, அமைதியான குடும்பம், ஆரோக்கியமான உடல்நிலை என்று இறைவனின் அருளால் வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் போய்க்கொண்டிருந்தது. அப்போது நமக்கென்று ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு வந்தது.

சொந்த வீடு :

     இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் எல்லோராலும் அந்தக் கனவை அவ்வளவு சுலபமாக நனவாக்கிக்கொள்ள முடிவதில்லை.  சிலரிடம் கை நிறையப் பணம் இருக்கும். ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் வீடு வாங்க முடியாது. சிலரிடம் பத்து பைசா கூட இருக்காது. ஆனால் எப்படியோ போராடி வீட்டை வாங்கிவிடுவார்கள். வீடு வாங்குவதற்குப் பிராரப்தம் (பூர்வ புண்ணியம்) இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

பறவைகளே தமக்கென்று ஒரு இருப்பிடத்தைக் கட்டிக் கொள்ளும்போது,  நமக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை.

     திருவள்ளுவர்,

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து”,

என்று சொல்கிறார்.

நாம் எப்போதும் உயர்ந்த விஷயங்களையே நினைக்க வேண்டும். சில நேரங்களில், நாம் நினைத்தது நினைத்த மாதிரியே நடந்துவிடும். சில நேரங்களில் நடக்காது. அப்படி நடக்காத நேரங்களில் கூட, நாம் மனம் தளராமல் உயர்வாகவே நினைக்க வேண்டும் என்பது தான் இக்குறளின் கருத்தாகும். ஏனென்றால் வாழ்க்கை என்பது எண்ணங்களின் பிரதிபலிப்பு. அதனால் தான் பாரதியார்,

“எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்”, என்று சொல்கிறார். அந்த வகையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம் தான்.

தூக்கணாங்குருவிக்கு மிக அழகாகக் கூடு கட்டும். கலையைக் கடவுள் கற்றுக் கொடுத்திருக்கிறார். கடவுள் பறவைகளுக்குக் கூடு கட்டும் வித்தையை கற்றுக் கொடுத்தாரே தவிர, கூடுகட்டித் தரவில்லை. அவை தன்னுடைய முயற்சியில்தான் கட்டிக்கொண்டன. அதைப்போல நாமும் முயற்சி செய்வோம். மற்றதைக் கடவுள் பார்த்துக்கொள்வார்.

வீட்டைக்கட்டிப்பார் கல்யாணத்தைப்பண்ணிப்பார்

என்று ஒரு பழமொழி சொல்வார்கள். கல்யாணத்தைக்கூடக் கஷ்டப்படாமல் செய்துவிடலாம். ஆனால் ஒரு வீட்டைக்கட்டி முடிப்பதற்குள் மண்டை காய்ந்துவிடும்.

      இன்றைக்குச் சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்குப் பெண் பார்க்க வேண்டும் என்றால், “மாப்பிள்ளைக்குச் சொந்த வீடு இருக்கிறதா?”, என்ற கேள்வியுடன்தான் பெண் பார்க்கும் படலமே துவங்குகிறது. எனவே சமூக அந்தஸ்துக்காகவே வீடு வாங்க ஆர்வம் காட்டும் நடுத்தர குடும்பத்தினரும் இருக்கிறார்கள்.

     மண்ணில் போட்ட காசு வீணாகாது என்பது இன்றையச் சூழலில் நூற்றுக்கு நூறு உண்மை. வீடு, நிலம் வாங்குவது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.

     காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள். எனவே நல்ல வேலை கிடைத்து கை நிறையச் சம்பாதிக்கும் போதே வீடு வாங்குவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.

நாங்கள் வாங்கிய வீடு :

நான் ஏற்கனவே கூறியபடி, நாங்கள் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்தோம். பல இடங்களில் எங்களுக்காக ஒரு நல்ல வீட்டைத் தேடினோம். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. எங்கள் பட்ஜெட்டிற்குள் வீடு கிடைக்காது. எங்கள் பட்ஜெட்டிற்குள் வீடு கிடைத்தால், சுற்றுப்புற சூழ்நிலை நன்றாக இருக்காது. இரண்டும் சரியாக இருந்தால், அந்தக் கட்டிடத்தில் வில்லங்கம் இருக்கும். இப்படியே நாள் ஓடிக்கொண்டிருந்தது.

     ஒரு நாள் என் மனைவி, ஜெர்மனியில் உள்ள ஸ்வாபியன் நகரமான (Swabian) Tamm இல் புதிதாக வரிசை வீடுகள் கட்டிக்கொண்டிருப்பதாகக் கூறினாள். நான் போய்ப் பார்த்தேன். அங்கே  ஏழு வரிசை வீடுகள்  கட்டப்பட்டிருந்தன. வீட்டின் விலையும் குறைவாக இருந்தது. அந்த. வீடு பெரிதாகவும் வசதியாகவும் இருந்தது. எல்லா சௌகரியங்களுடனும், அந்த வரிசை வீடுகள் மிக அழகாக இருந்தன. சுற்றுப்புற சூழ்நிலைகளும் நன்றாக இருந்தது.

    புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த  இந்த அடுக்கு மாடி வீடுகளை  ஸ்டார்ட் ஹவுஸ் (Start house) என்று சொல்வார்கள்.

 ஒப்பந்ததாரர் (Contractor) வீடு மட்டும் தான் கட்டிக் கொடுப்பார். வீட்டிற்கு உள்ளே வண்ணமடிப்பது (Painting) மற்றும் Wall Paper ஒட்டுவது எல்லாமே வீட்டை வாங்கியவர் தான் செய்து கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

கடவுளின் கிருபையால் பல பிரச்சனைகளை சமாளித்து அந்த வீட்டை வாங்கி விட்டோம். ஒரு நல்ல நாள் பார்த்து  அந்த வீட்டிற்கு நாங்கள் சந்தோஷமாகக் குடிபெயர்ந்தோம். அந்த வீட்டிற்குப் போன முதல் நாளே நண்பர்களை எல்லாம் அழைத்து, நம் ஊரில் கொண்டாடுகிற மாதிரி பால் காய்ச்சி,  நன்றாகக் கொண்டாடினோம்.  

நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் :

எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. எல்லோருடையக் குடும்பங்களிலும் இருப்பது போல் சில சின்னச்சின்ன பிரச்சனைகள்,  சண்டை சச்சரவுகள் எல்லாம் எங்களுக்குள்ளும் வந்திருக்கிறது. ஆனால் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனதாலும், விட்டுக்கொடுத்துப் போனதாலும் எங்களுக்குள் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை.

    கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போனால், குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் இருக்காது. 

எண்ணி எண்ணி செலவழிக்காமல் (count and spend) எண்ணி எண்ணி செலவழிக்கலாம் (Think and spend) . 

கணவனுடைய சம்பளத்தை செலவு செய்தாலும், மனைவியின் சம்பளத்தை சேமித்தோ அல்லது வெவ்வேறு தேவைகளுக்கோ பயன் படுத்தலாம். ஆடம்பரமாக வாழலாம். ஆனால் இருவரும் வேலைக்குப் போகும் போது குழந்தைகளின் நிலைமை பரிதாபமாக இருக்கும். வாழ்க்கை இயந்திரம் (Machine) மாதிரி ஆகிவிடும்.

     நாங்கள் இருவருமே வேலைக்குப் போய்க் கொண்டிருந்தோம். இருவருக்கும் வேலைப் பளு அதிகமாக இருந்தது. எங்களுக்குள் பேசிக்கொள்ளக்கூட நேரம் கிடைப்பது அரிதாக இருந்தது. குழந்தைகளையும் சரியாகக் கவனிக்க முடியாமல் இருந்தது.

     ஓடி ஓடி உழைப்பதே குழந்தைகளுக்காகத்தான். அந்தக் குழந்தைகளையே கவனிக்க நேரம் கிடைக்கவில்லை என்றால், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்தேன். பணத்தை வைத்து ஆடம்பரத்தை வாங்க முடியும். ஆனால் நிம்மதியை வாங்க முடியாது.

      அதனால் நாங்கள் இருவரும் பேசி ஒரு முடிவிற்கு வந்தோம். “நான் வேலைக்குப் போய் சம்பாதித்து வீட்டுச் செலவுகளைப் பார்த்துக்கொள்கிறேன். நீ வீட்டிலிருந்து, வீட்டுப் பொறுப்புகளையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்”, என்று சொன்னேன். அவளும் ஒப்புக்கொண்டாள்.   

    என் மனைவிக்குக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும், வீட்டு வேலைகளைப் பார்ப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. குழந்தைகளுக்கு இந்த வயதில் தாயின் அருகாமை தேவை. பாடம் சொல்லிக்கொடுப்பதற்கும், நல்லப் பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுப்பதற்கும் குழந்தைகளுக்கு அம்மா அருகில் இருக்க வேண்டும். அதிலும் என் மனைவிக்கு ஏற்கனவே வேலைக்குப்போய், உலக அனுபவங்கள் நிறையவே இருந்தது. அதனால் எல்லாப் பொறுப்புக்களையும் மிக அழகாகச் செய்தாள்.

     நான் ஒரு பக்கம் அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டேன். மற்றொரு பக்கம் வீட்டில் வண்ணமடிப்பதிலிருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டேன்.  அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்.

     வீட்டை நிர்வகிப்பதில் என் மனைவி சகலகலாவல்லியாக இருந்தாள். அவள் பாரம்பரியமாகச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள். அதனால் நான் கொண்டு வரும் பணத்தைச் சிக்கனமாக செலவழித்ததுடன்,  வீட்டையும் நன்றாகப் பராமரித்து வந்தாள். அதனால் வீட்டைப்பற்றியக் கவலை இல்லாமல் என்னால் மற்ற வேலைகளைப் பார்க்க முடிந்தது. இப்படியே சிறுக சிறுக சேமித்து அலுவலகத்தில் லீவு கிடைக்கும் போதெல்லாம் நாங்கள் குடும்பத்துடன் பல ஊர்களுக்குச் சுற்றுப் பயணம் செய்வோம்.

பிரயாணம் :

     சுற்றுலா என்றாலே ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் ஜாலி தான். பிரயாணம் என்பது சந்தோஷமான அனுபவம். இந்தியாவில் க்ஷேத்திராடனம் என்ற பெயரில் எல்லா கோவில்களுக்கும் போய் தீர்த்த ஸ்நானம் எல்லாம் செய்வார்கள். இது காலம் காலமாக இந்திய மண்ணில் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.

      என்னுடைய வீடு, என்னுடைய நாடு என்ற குறுகிய வட்டத்திலிருந்து முதலில் நாம் வெளியில் வர வேண்டும். நான், எனது குடும்பம், எனது அலுவலகம், எனது ஊர், எனது நாடு, எனது மொழி, என் மக்கள் என இத்தனை படிநிலைகளையும் கடந்து, “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். கேளிர் என்றால் உறவு என்று பொருள். ‘பழகினால் தானே இவர்களும் என்னுடைய உறவினர்கள்‘ என்று சொல்ல முடியும்! அதற்கு நிறையப் பிரயாணம் பண்ண வேண்டும்.

    வீட்டிலிருந்து அலுவலம், அலுவலகத்திலிருந்து வீடு என்று ஒரே மாதிரி வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது. வாழ்க்கையில் மாற்றங்கள் தேவைப்படும். குடும்பத்துடன் நாம் செல்லும் ஒரு சிறியப்பயணம், நம் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தைத் தரும்.

    நாங்கள் நிறையப் பிரயாணம் செய்திருக்கிறோம்ம். விடுமுறை நாட்களில் நாங்கள் குடும்பத்துடன் ஐரோப்பாவில் உள்ள நிறைய இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். அவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்.

     குழந்தைகளுடன் பிரயாணம் செய்யும் போது  அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை எடுத்துச்செல்ல வேண்டி இருக்கும். அதனால்  ஊருக்குப் போக வேண்டும் என்ற உடனே, ‘எது தேவை, எது தேவையில்லை’, என்று என் மனைவி பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துக்கொள்வாள். அவள் மிக அழகாக எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செயல்படுவாள். அதனால் நாங்கள் எந்தக் குறையும் இல்லாமல் வசதியாகப் பிரயாணம் செய்தோம்.

      நாம் பிரயாணம் செய்வது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் அல்ல. பிரயாணங்கள் நம் அறிவை வளர்க்கின்றன. பயணிகள் தான் புதிய நிலங்களையும், நாடுகளையும், கண்டங்களையும் கண்டறிந்திருக்கிறார்கள். எங்கெங்கோ வாழும் விலங்கினங்களையும், பறவைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நாடுகளுக்கு இடையில் வணிக உறவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடலில் வரமுடியும் என்பதைக் கண்டறிந்தார்கள்.

     கடலும் மலையும் நாடும் கண்டமும் பிரித்தாலும், உலகம் என்பது ஒன்றுதான். இந்த உலகத்தில் மக்கள்  வெவ்வேறு மொழிகள் பேசினாலும், விதவிதமான ஆடைகள் அணிந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொருவிதமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்தாலும், மனிதர்களுக்கிடையே அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை பயணங்களின் மூலமே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

     நாங்கள் பிரயாணத்தின் போது இளைஞர் DJH விடுதிகளில் தான் தங்குவோம் (Deutsche Jugendherberge). அதனால் பல குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அப்படிப் பழகும் போது, அவர்களுடைய கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.  எங்கள் குழந்தைகள்  தன்னம்பிக்கை மற்றும் தகவல் தொடர்புத் திறன்களைக் கற்றுக்கொண்டனர். எனவே பிரயாணம் என்பது அனைவரும் மேற்கொள்ள வேண்டிய நல்ல விஷயம்.

இந்தியப் பயணம் :

நாங்கள் ஜெர்மனியில் பிரயாணம் செய்வது போல், என் தாய் நாட்டையும் விட்டுக்கொடுக்காமல் பறந்து வந்து விடுவோம். “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?”, என்று ஒரு திரைப்படப்பாடல் இருக்கிறது. அது உண்மை தான். தாய்நாட்டில் காலடி வைக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

இந்தியாவில் எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது. அதனால், நான் மட்டும் தனியாக வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்குச் செல்வேன்.   பொருளாதாரப் பிரச்சனைகளால் ஐந்திலிருந்து ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தான் எங்களால் குடும்பத்துடன் இந்தியாவிற்குச் செல்ல முடியும். குடும்பத்துடன் செல்வதில் ஒரு சுகம் இருக்கிறது.

      இந்தியாவில் என்னுடைய குடும்பம் இருந்தது. அத்துடன் பழங்குடியினரின் செயல்பாட்டில் நான் ஒரு  உறுப்பினராக இருந்தேன். உறுப்பினர் என்கிற முறையில், நான் என் கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்றால், தொடர்ந்து உறுப்பினராக இருக்க முடியாது. எல்லோரையும் போல என்னையும் வந்து போகும் விருந்தினராக்கி விடுவார்கள். ஒரு சுறுசுறுப்பான உறுப்பினராக இருந்து நான்கு பேருக்குப் பயன்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்காகவே வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு வருவேன். இதற்காகவே சம்பாத்தியத்திலிருந்து ஒரு தொகையைச் சேமித்துக்கொண்டு வருவேன்.

     பொதுவாக வருடத்தின் தொடக்கத்தில் விமான டிக்கெட் மலிவாக இருக்கும். ஒரு வருடம் நான் புத்தாண்டு விழா நாளில் இந்தியாவிற்கு வந்து நான்கு வாரங்கள் இருந்தேன். இந்த விடுமுறையில், நான் என் அக்கா சியாமளாவின் வீட்டில் விருந்தினராக இருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது அவர்கள் வீட்டில் காண்பித்த அன்பும், அக்கறையும், விருந்தோம்பலும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. அவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிவபுரம் மோகன்தாஸ் வீடு :

நான் இந்தியாவிற்கு வந்ததும் சிவபுரம் போனேன். சிவபுரத்தில் என்னுடைய Cousin மோகன்தாஸ் வீட்டில் தங்கி இருந்தேன். அந்த ஊரில் ஒரு அழகான சிவன் கோவில் இருக்கிறது. மறுநாள் காலை சிவபெருமானை தரிசிப்பதற்காக நான் கோவிலுக்குப் போயிருந்தேன். அந்தக் கோவிலில் எனக்கு ஒரு சந்தோஷமான செய்தி காத்திருந்தது.

      கோவிலில்  சிவபெருமானுக்கு ஆரத்தி காட்டினார்கள். மனதிற்கு நிறைவாய் இருந்தது.

     பூசாரி என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் . அவர் ஏன் அப்படிப் பார்த்தார் என்று எனக்குப் புரியவில்லை. நான் எதுவும் கேட்காமல் பேசாமல் அமைதியாக சிவனை தரிசித்துக் கொண்டிருந்தேன்.

     ஹாரத்தி முடிந்ததும் எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தார்கள். அதற்குப்பிறகு அந்தக் கோவில் பூசாரி என் அருகில் வந்து, “கந்தன் உங்களைச் சந்திக்க விரும்பினார்” என்று கூறினார்.

     கந்தன் யார் என்று எனக்கு நினைவிற்கு வரவில்லை. அதனால், ‘எந்த கந்தன்’, என்று அவரிடமே கேட்டேன். “கல்யாண கந்தன்” என்று சுருக்கமாக பதில் சொன்னார். உடனே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.  ‘ஓ, கல்யாணத் தரகரா?’ என்று கேட்டேன். கல்யாணம் என்றால் தமிழில் திருமணம் என்று பொருள். அவர் எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அதனால் “அவருக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப்பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்” என்று கேட்டேன்.

    அவர்,  “உங்கள் Parasala உறவினர் உங்களுக்கு ஒரு நல்ல மந்த்ஜருசி  (Mandjarusi) விருந்துக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறாராம். அதைச் சொல்வதற்காகத்தான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்”, என்றார். அதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷமாகிவிட்டது.

 ஸ்யாமளா அக்கா என்னிடம் சொல்லச்சொன்ன ஒரு செய்தியை கந்தன் எல்லோரிடமும் பரப்பிவிட்டார். அது அவருடைய குணம்.

கல்யாணத் தரகர் : கந்தன் யார் தெரியுமா? முதலில் அவரைப்பற்றிச் சொல்கிறேன். கந்தன் ஒரு கல்யாணத் தரகர். அவரைப்பற்றிச் சொல்கிற அளவுக்குப் பெரிய பின்னணி எல்லாம் கிடையாது. அவர் மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர்.   எல்லோரிடமும்  நன்றாகப் பழகுவார்.  எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து நல்லவிதமாக நடந்து கொள்வார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.

     எல்லோருடைய வீட்டிற்கும் அவர் சகஜமாகப் போய் வந்துகொண்டிருப்பார். திடீர் என்று கந்தன் வீட்டிற்கு வரவில்லை என்றால், ‘அவர் மனசு வருத்தப்படற மாதிரி யாராவது பேசிட்டேங்களா?’ என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளும் அளவிற்கு அவர் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருந்தார். அதனால் தான் அவர் ஒரு வெற்றிகரமான திருமணத் தரகராக மாறியிருப்பாரோ என்று எனக்குத் தோன்றியது. அவரிடம் தான் என்னுடைய அக்கா எனக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருந்தாள்.

மந்த்ஞருசி விருந்து : (Mandjarusi)     

குடும்ப உறுப்பினர் யாரையாவது நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும் போது அவர்களுக்கு விருந்து வைப்பார்கள். அந்த விருந்துக்கு மந்த்ஜருசி விருந்து என்று பெயர்.

     மஞ்சள் என்றால் yellow கலர்.  அரிசி என்றால் Rice. இது பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் குடும்ப விருந்தினரைக் கௌரவப்படுத்துவதற்காக செய்யப்படும் சிறப்பு விருந்து.

       இந்த விருந்தில் எல்லாவிதமான காய்கறிகளும் சேர்த்துச் சமைப்பார்கள்.  தங்கப் பருப்புப் பாயாசம் எனப்படும் சுவையான இனிப்புப் பாயசம் எல்லாம் இந்த மந்த்ஜருசி  (Mandjarusi) விருந்தில் இருக்கும்.

     இந்த இனிப்பு, தேங்காய்த் துருவல், வெள்ளைப் பருப்பு, வெண்ணெய், கரும்பு, ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவையாக இருக்கும்.

     இந்த சமையலை  நினைத்த உடனே என் வாயில் தண்ணீர் வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, எனது உறவினர்களைப் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கப் போகிறேன். பேச எத்தனையோ விஷயங்கள் இருக்கும். நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. நான் எல்லாவற்றையும் மறந்து அந்த ஞாபகத்திலேயே ஆழ்ந்துவிட்டேன். 

    அப்போது பூஜாரி என் அருகில் வந்து “வழக்கமாக அவர்கள் சில வாரங்களுக்கு மட்டுமே இங்கு வருவார்கள், ஆனால் பொருத்தமான திருமண தேதி டிசம்பர் அமாவாசைக்குப் பிறகுதான்” என்று சம்மந்தமே இல்லாமல் சொல்லிவிட்டு, என்னுடைய பதிலுக்காகக் காத்திருந்தார். .

     அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு முதலில் புரியவில்லை. ஒரு கணம் யோசித்த பிறகு, ‘அவர் என்ன நினைக்கிறார்’, என்று என்னால் யூகிக்க முடிந்தது.

      ஸ்யாமளா அக்கா என்னை விருந்துக்கு அழைத்ததைக் கல்யாண கந்தன் சொன்ன உடனே, ‘எனது உறவினர் யாரோ ஒருவருக்குப் பொருத்தமான ஒரு துணையைக் கந்தன் பார்த்திருக்கிறார்’, என்று பூஜாரி நினைத்துவிட்டார். அதற்குள் ‘அமாவாசைக்குப் பிறகு தான் பொருத்தமான நாள்’, என்றெல்லாம் கற்பனை குதிரையை ஓட்டிவிட்டார்.  எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

     அதற்குப்பிறகு நான் அவரிடம், ‘அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. ஸ்யாமளா அக்கா என்னைப் பல வருடங்கள் கழித்துப் பார்க்கிறாள். அதற்காக இது ஒரு சாதாரண விருந்து. அவ்வளவு தான்’, என்று சொன்னேன். பூசாரி தலையசைத்துவிட்டுப் போய்விட்டார். ஸ்யாமளா அக்கா என்றதும் எனக்கு எங்கள் கூட்டுக்குடும்பம் தான் நினைவிற்கு வந்தது.

கூட்டுக்குடும்பம் :

     நாங்கள் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். அதனால் எங்கள் குடும்பத்தில் நிறைய அண்ணா, அக்கா எல்லாம் இருப்பார்கள். கூட்டுக்குடும்பத்தில் உறவினர்கள் அவரவர் வயதுக்கேற்ப ஒருவரை ஒருவர் அக்கா, அண்ணா என்று கூப்பிடுவார்கள். அக்கா என்றால் மூத்த சகோதரி. அண்ணா என்றால் மூத்த சகோதரன். சில சமயம் பழகும் விதத்தையும் வயதையும் வைத்துப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள். கூட்டுக்குடும்பத்தின் சுகமே தனி தான். கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காண்பித்துக்கொண்ட அன்பையும் அக்கறையையும் வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாது. 

     அந்த வகையில் ஸ்யாமளா அக்கா மிகவும் அன்பானவள். எனக்கு ஸ்யாமளா அக்கா என்று கூப்பிட கஷ்டமாக இருந்தது. ஸ்யாமளா என்ற பெயர் பெரிதாக இருந்ததினால் அதைச் சுறுக்கி சியாக்கா என்று கூப்பிடுவேன்.

     சியாக்கா என்று கூப்பிட்டால் அவளுக்குப் பிடிக்காது. நான் கூப்பிடும் போதெல்லாம் அவளுக்குக் கோபம் கோபமாக வரும். என் காதைப்பிடித்துத் திருகிச் செல்லமாக, ‘சியாக்கா என்று கூப்பிடாதே’, என்று சொல்வாள். நான் கேட்கவே மாட்டேன். அப்படித்தான் கூப்பிடுவேன். வேறு வழி இல்லாமல் அப்படியே விட்டுவிட்டாள்.

    அவள் என்னை விருந்துக்கு அழைத்ததும் நான் சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். நான் விருந்துக்கு வருகிறேன், என்று அவளுக்குத் தகவல் சொல்ல நினைத்தேன்.  ஆனால் கல்யாண கந்தனிடம் சொல்லியனுப்ப எனக்கு விருப்பம் இல்லை.

     எப்படித் தகவல் சொல்வது என்று நினைத்த போது கடிதம் எழுதித் தபாலில் அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். ஜெர்மனி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டக் காரணத்தினால், அவர்களுடைய அழைப்பிற்குக் கண்ணியமாகவும், மரியாதையாகவும் எப்படி பதில் எழுதுவது என்பதை நான் மறந்துவிட்டேன்.

     அன்று நான் என் மருமகன் மோகன்தாஸ் வீட்டில்  இருந்தேன். அவரது மனைவி சாந்தா ஒரு நல்லப் பெண்மணி. அவள் நல்ல நல்ல உணவை நிறையச் சமைத்து அனைவருக்கும் பரிமாறுவாள்.  அவளுக்கு அவ்வளவு நல்ல மனது.

     அவள் நன்றாகச் சமைப்பாள். மருத்துவ மூலிகைகளை வைத்து சுவையான சட்னிகள் செய்வாள். பண்டிகை நாட்களில் விருந்துக்கு சமைப்பது போல் விதம் விதமாகச் சமைப்பாள். மோகன்தாஸ் அவள் சமைப்பதற்கு நிறைய உதவிகள் செய்வார். ஆனாலும் சமைத்து முடிக்க நிறைய நேரம் ஆகிவிடும்.      அவள் சமைத்துக்கொண்டிருந்த போது நான் மொட்டை மாடிக்குச் சென்று, அருகில் உள்ள கோவிலையும், அங்கே என்ன நடக்கிறது என்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.  வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

   கோவிலின் முன் ஒரு குளம் இருந்தது. பக்தர்கள் அந்தக் குளத்தில் கால் கழுவிக்கொண்டுக் கோயிலுக்குள் செல்வதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். மனதிற்கு ரம்மியமாக இருந்தது.      அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தமிழில் எப்படி ஒரு சிறு கடிதம் எழுதுவது என்று யோசித்தேன். அதனால் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

கடிதம் எழுதல் :

     தமிழ் ஓம் அடையாளங்கள் மற்றும் தென்னை மரங்களின் படங்களுடன் அலங்கரிக்கப்பட்ட குங்குமப்பூ லெட்டர் பேடை எடுத்து எனது நன்றியையும் அர்ப்பணிப்பையும் முதலில் தெரிவித்தேன். பிறகு எழுத ஆரம்பித்தேன்.

அன்புள்ள சியாக்கா

     நீங்கள் என்னை விருந்துக்கு அழைத்ததாகக் கோவில் பூசாரி கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் ஏற்கனவே உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்ததை போலவே நீங்களும் என்னை விருந்துக்கு அழைத்திருக்கிறீர்கள்.  நாம் எல்லோரும் ஒன்றாகக் கூட்டுக்குடும்பமாக இருந்த காலங்களை  இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. அவை எல்லாம் மறக்க முடியாத நாட்கள். அந்த நாட்கள் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.

     அக்கா, இப்போது நான் சிவபுரத்தில் இருக்கிறேன். இன்று காலை கோவிலுக்குச் சென்று பூஜை செய்தேன். நம்முடைய வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் கொடுத்த விநாயகக் கடவுளுக்கு நன்றி சொன்னேன். என்னுடைய குடும்பத்தில்  அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.  என்னைச் சுற்றியுள்ள சமுதாயமும் தற்போது நன்றாக இருக்கிறது. நீங்களும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.  நீங்கள் எனக்காக மந்த்ஜருசி (Mandjarusi) விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதைக் கேட்டதும், எனக்கு சந்தோஷமாக இருந்தது.  அக்கா, நிச்சயமாக நான் வருகிறேன். ஆனால் நீங்கள் இதற்காக நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யக் கூடாது. ஒரு எளிய விருந்தே போதும். அதுவே எனக்கு சந்தோஷம் தான். விருந்தைவிட உங்களைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் எனக்கு அதிகமாக இருக்கிறது. . ஒருவரையொருவர் பார்த்து பழைய விஷயங்களைப் பேசும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. வரும் பௌர்ணமி அன்று, உங்களைச் சந்திக்க வருகிறேன். டோபியா-கா சிப்ஸ் மற்றும் காஷ்மீர் ஆப்பிள்களைக் கொண்டு வருகிறேன். பார்வதி, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி ஆகிய தெய்வங்கள் உங்களை ஆசிர்வதித்துப் பாதுகாக்க வேண்டும்என்று பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் உங்கள் தம்பி சுரேஷ்.

     நான் எழுதிய கடிதத்தை மீண்டும் படித்துப் பார்த்தேன். அங்கும் இங்கும் இருந்த சில தவறுகளைத் திருத்தினேன். நன்றாகத்தான் எழுதி இருக்கிறேன் என்று திருப்தி அடைந்தேன்.

     கடிதம் எழுதி முடித்ததும்  ஒரு கப் இஞ்சி சாயும், கொண்டைக்கடலையில் செய்யப்பட்ட முறுக்கும்  என் பக்கத்தில் ஒரு தட்டில் இருப்பதைப் பார்த்தேன். துளசிச் செடிக்குப் பக்கத்தில், ஒரு சிறிய மேசை மாதிரி இருந்த ஒன்றில்  இரண்டு சிவப்பு வாழைப்பழங்கள் இருந்தது.  மோகன்தாஸ்  எனக்காக வைத்துவிட்டுப் போயிருக்கிறார். நான் அவர் வந்தது கூடத் தெரியாமல் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்.

     பௌர்ணமிக்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. ஆனால் நான் இன்னும் சில குடும்ப விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதைத்தவிர மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சில வேலைகள் இருந்தது. ஜெர்மனியில் இந்த வேலையை முடிக்க சில மணிநேரங்கள் தான் ஆகும். ஆனால் இந்தியாவில் அதற்குப் பல நாட்கள் ஆகும்.  ஒரு கஷ்டமான விஷயம் நடக்க. வேண்டும் என்றால் அது, ‘வானத்துச் சந்திரன் பூமிக்கு வந்த மாதிரி’, என்று சொல்வார்கள். இந்தியாவில் சுலபமாக வேலை நடக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகாரிகள் நல்லவர்களாக இருக்க வேண்டும் அல்லது வானத்துச் சந்திரன் பூமிக்கு வர வேண்டும். அப்படி இல்லை என்றால் நம்முடைய ஆவணங்கள் நகரவே நகராது. 

சியாக்கா வீட்டிற்குச்செல்லல் :

     சியாக்கா ஊருக்குக் கொஞ்சம் வெளியே வசிக்கிறாள்.  அங்கு செல்வது கஷ்டமான விஷயம் தான். முதலில் நான் டாக்ஸியில் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப்பிறகு டாக்சியில் போனால் தனியாக போரடித்துக் கொண்டுப் போக வேண்டி இருக்கும். அதை விட பஸ்சில் போனால் நான்கு பேருடன் பேசிக்கொண்டு பிரயாணம் பண்ணலாம்.  அதனால் டாக்சியில் போக வேண்டாம் என்றும், பஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷாவில் வழக்கமாகப் போகிற மாதிரியே போகலாம் என்றும் முடிவு செய்தேன்.

       பேருந்து பயணத்தின் போது பக்கத்து இருக்கையில் ஒரு பெரியவர் வந்து உட்கார்ந்தார். அவர் நேரம் போவது தெரியாத அளவிற்கு ஜாலியாக பேசிக்கொண்டு வந்தார். அவர், ‘நான் யார்?, எங்கிருந்து வருகிறேன்?, எங்கு செல்கிறேன்’, என்று எல்லாம் ஆர்வத்துடன் கேட்டார். அவர் கேள்வி கேட்டு ரம்பம் போடுகிறார் என்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை. மாறாக, நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு எனக்குப் பரிந்துரைகளை வழங்கிய ஒரு நட்பான மனிதனாகத் தான் அவர் எனக்குத் தோன்றினார். அவரிடம் எனக்கு எந்த ஒரு வித்தியாசமான உணர்வும் வரவில்லை. சந்தோஷமாக அவருடன் பேசிக்கொண்டு போனேன். இறங்க வேண்டிய இடம் வந்தது. பஸ்சில் இருந்து இறங்கி ஆட்டோப் பிடித்து தான் சியாக்கா வீட்டிற்குப் போக வேண்டும்.

     ஆட்டோ கிடைத்து , ‘நான் எங்குச் செல்ல வேண்டும்’ என்று ரிக்ஷா ஓட்டுநரிடம் சொன்ன உடனே,  “ஓ அது நீ தானா” என்றார். அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ‘அது நீ தானா?’ என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை நான் சியாக்கா வீட்டிற்கு வரும் விஷயம் ஏற்கனவே இந்த ரிக்ஷாக்காரருக்குத் தெரியுமோ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஆட்டோ சியாக்காவின் வீட்டு வாசலில் நின்றது.

சியாக்காவின் வரவேற்பு :

     ஆட்டோ சத்தம் கேட்டு சியாக்கா வெளியில் ஓடி வந்தாள். அவளுடைய முகமெல்லாம் சிரிப்பு. சில வருடங்கள் கழித்து சியாக்காவைப் பார்த்தது எனக்கும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு  சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை. சியாக்கா மகிழ்ச்சியுடன், “வா, வா, வந்துட்டியா, ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லிக்கொண்டே, என் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போனாள்.

        சியாக்காவின் கணவர் ஒரு அரசு ஊழியராக இருந்தார். ஓடி ஓடி உழைத்து இந்திய வழக்கப்படி ஐம்பத்து எட்டாவது வயதில் ஓய்வு பெற்றார். அவர்கள் இருவருக்கும் முருகேஷ் என்று ஒரு மகன் இருக்கிறான். ஒரே பையன் என்கிற காரணத்தினால் அவனுக்கு அளவிற்கு அதிகமாகச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டார்கள். பெரும்பாலானப் பெற்றோர்கள் இந்தத் தவற்றைச் செய்கிறார்கள். செல்லம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அதே சமயம் கண்டிப்பாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நல்லபடியாக வளரும். 

     முருகேஷ் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு பொருத்தமான வேலையைத் தேடிக்கொண்டிருந்தான்.

     அவன் பார்க்க அழகாக இருந்தான். அதனாலேயே தன்னை ஷாருக்கானைப்போல நினைத்துக்கொண்டு கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான். தனக்காகச் சிவப்பு கம்பளம் விரிக்கப்படும் என்று காத்துக்கொண்டிருந்தான்.

     உண்மையில் வாழ்க்கை என்பது முட்களின் நடுவில் ரோஜாவைப் போன்றது தான். முள்ளிடம் குத்து படாமல் மலரின் வாசனையை அனுபவிக்க வேண்டும்.

     யாருடைய வாழ்க்கையிலும் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுவதில்லை. கற்பனை வேறு. நிஜ வாழ்க்கை வேறு. நாம் தான் நம்மை யதார்த்தத்திற்குப் பழக்கிக்கொள்ள வேண்டும். இது இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவதில்லை.

தோட்டத்தில் உரையாடல் :

     நான், சியாக்கா, அவளுடையக் கணவர் மூவரும் தோட்டத்தில் உள்ள நீரூற்றுக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். என்னுடைய குடும்பம் எப்படி இருக்கிறது,  உறவினர்களின் தற்போதைய சூழ்நிலை எப்படி இருக்கிறது என்றெல்லாம் சியாக்கா விசாரித்தாள். பிறகு அவளுடைய க்ஷேம லாபங்களை பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். நாங்கள் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

     சிறிது நேரம் கழித்து அவள், “நீ கொஞ்ச நேரம் உன் அத்தானுடன் பேசிக்கொண்டிரு. நான் போய் நம்ப மூன்று பேருக்கும் ஒரு நல்ல காபி போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன்”, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

     அவளுடையக் கணவர் என்னிடம், ‘இப்போது ஓய்வுபெற்ற பிறகு வீட்டில் சும்மா இருக்கக் கஷ்டமாக இருந்தது. அதனால் கிறிஸ்தவ சங்கத்தில் பொருளாளராகச் செயல்பட்டு வருகிறேன்’ என்று கூறினார். பிறகு என்னைப்பற்றி விசாரித்தார். பொதுவாக வெளிநாட்டிலிருந்து யாராவது வந்தால் ஒருவர் கேட்கும் பொதுவான கேள்விகளை அவர் என்னிடம் கேட்டார். ஜெர்மனியின் வாழ்க்கை எப்படி இருக்கும், எனது சூழல், அங்கு உணவு எப்படி இருக்கும் மற்றும் அந்த ஊர் குளிரை நான் எப்படிச் சமாளிக்கிறேன் என்பது பற்றி எல்லாம் கேட்டார். பிறகு பனி குழப்பத்தைச் செய்தியில் பார்த்ததாகச் சொன்னார்.

      நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, சியாக்கா மூன்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோப்பைகளில் காபியும், ஒரு தட்டில் லட்டுகளையும் எடுத்துக்கொண்டு வந்தாள். ஜெர்மனியில் பீங்கான் கோப்பைகளில் பழகிய எனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கப் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

     நாங்கள் கூட்டுக்குடும்பமாக இருந்த போது எல்லாமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் தான். இப்போது நாகரீக வளர்ச்சியில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோப்பைகள் காணாமல் போய், பீங்கான் கோப்பைகள் பிரபலமாகிவிட்டது.

     பழைய ஞாபகத்தில் மூழ்கி இருந்த என்னை சியாக்கா தட்டி, ‘காபி எடுத்துக்கோ’, என்றாள். சியக்காவிற்கும் அவள் கணவருக்கும் சர்க்கரை நோய் காரணமாகச் சர்க்கரை இல்லாமல் காபி குடித்துப் பழகிவிட்டார்கள். ‘நாங்கள் சர்க்கரை போட்டுக்க மாட்டோம். உனக்குக் காபியில் சர்க்கரை போடணுமா?’ என்று கேட்டாள். பிறகு “முருகேஷ் சீக்கிரம் இங்கே வந்துடுவான்” என்றாள். ‘Phone பண்ணினானா?’, என்று கேட்டேன். ‘இல்லை. அவனுடைய Bike சத்தம் கேட்கிறது. அதை வைத்துத் தான் சொல்கிறேன்’, என்றாள்.

      வீட்டிற்கு உள்ளே  பாதை தாழ்வாக இருந்தது. முருகேஷ் தனது மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து பெரிய சத்தத்துடன் நிறுத்தினான்.  பிறகு வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு, சினிமா நட்சத்திரம் போல் ஸ்டைலாக வண்டியிலிருந்து  இறங்கினான்.  உள்ளே வந்து சாவகாசமாகக் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றினான். அப்போதுதான் அவன் என்னைப் பார்த்தான். சந்தோஷமாக கிட்டே வந்தான்.

    நானும் சிரித்துக்கொண்டே,  “உன்னைச் சின்ன பையனாகப் பார்த்தேன். அதற்குள்ளே எவ்வளவு பெரியவனாக வளர்ந்துவிட்டாய்’, என்று சொல்லிக்கொண்டே  அவனுடையத் தோளில் தட்டினேன்.

     அவன், “மாமா, நீங்கள் நாளைக்குத் தான் வரப்போகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கே வந்திருக்கேங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா’, என்றான். “பௌர்ணமிக்கு வருகிறேன் என்று எழுதி இருந்தேன். இன்றைக்குத் தானே பௌர்ணமி. நான் சரியாகத்தான் வந்திருக்கிறேன்’, என்று சொன்னேன்.

      அவனும் சகஜமாக எல்லாரும் கேட்கிறப் பொதுவானக் கேள்விகளையே கேட்டான். நானும் அவனுடையக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன்.

     அதற்குள் அவனுடைய அப்பா எழுந்து, “சனிக்கிழமையன்று பௌர்ணமி வந்தால் விரதம் இருப்பேன். இன்றைக்குச் சனிக்கிழமை. அதனால் கோவிலுக்குப் போக வேண்டும். அப்புறம் தேவாலயத்தில் பொருளாளராக இருக்கிறேன். அங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது. அதையும் முடித்துக்கொண்டு சீக்கிரம் வருகிறேன். அதுவரை  முருகேஷுடன் பேசிக்கொண்டிரு. கொஞ்ச நேரம் நீயும் ஓய்வு எடுத்துக்கொள்”, என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். ஓய்வு பெற்ற பிறகும் சோம்பலில்லாமல் வேலை செய்யும் அத்தானைப் பார்த்துப் பெருமையாக இருந்தது.

     நான் முருகேஷிடம், ‘என்ன செய்து கொண்டிருக்கிறாய்?, என்ன செய்யப் போகிறாய்?’, என்றெல்லாம் விசாரித்துவிட்டு, அவனுடைய எதிர்காலத்திற்குத் தேவையான சில குறிப்புக்களைக் கொடுத்தேன். ஆனால் அவன் அதைக் கேட்பதில் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகமாகப் பேசாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

     அப்போது சியாக்கா மதிய உணவிற்கு மூன்று பெரிய, கிழியாத வாழை இலைகளைப் பறித்துக்கொண்டு வரும்படி முருகேஷிடம் கூறினாள்.

     பிறகு, ‘பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சமையலுக்குத் தேங்காய்ப்பால் வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவர்களிடம் அதை ஞாபகப்படுத்திவிட்டு வா’,  என்றாள். முருகேஷ் காது கேட்காத மாதிரி இருந்தான். அக்கா விடவில்லை. இரண்டாவது முறை சொன்னாள். வேறு வழி இல்லாமல் முருகேஷ் எழுந்து பக்கத்து வீட்டிற்குப் போனான்.

     அக்கா சமையலில் பிசியாக இருந்தாள். அதனால் நான் தனியாகத் தோட்டத்தில் அமர்ந்து கோழிகளையும், பூனையையும் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அந்தப் பூனையின் கண்களை நேரடியாகப் பார்த்தேன். அது என் பார்வையைத் தவிர்க்கவில்லை. அதுவும் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. பூனையின் கண்களில் செங்குத்தாக ஒரு கோடு இருந்தது. அது அந்தப்பூனைக்கு அழகாக இருந்தது.

     திடீர் என்று வாசல் பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது. என்னவென்றுப் பார்த்தால் நிறைய உறவினர்கள் அரட்டை அடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் காய் வெட்டினால் மற்றவர் தேங்காய் திருகுவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துக்கொண்டு அழகாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். பார்க்க நன்றாக இருந்தது.

     கடைசியாக, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்த போது இரண்டு மூன்று உறவினர்கள் தான் இருந்தார்கள். இப்போது பல உறவினர்கள் இருந்தனர்.

     அப்போது கேட்  சத்தம் கேட்டது.  திரும்பிப் பார்த்தேன். ஒரு சிறுமி வந்து கொண்டிருந்தாள். அவள் ஒரு பாத்திரத்தை ஜாக்கிரதையாக உள்ளே எடுத்துக்கொண்டு வந்தாள். அக்கா கேட்ட தேங்காய்பாலாக இருக்கலாம்.

     சியாக்கா தோட்டத்திற்கு அந்தச் சிறுமியை அழைத்துக்கொண்டு வந்து, அவளுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். அவள் பக்கத்து வீட்டுக்காரரின் பேத்தி என்று கூறினாள். அது என்னிடம் வந்து, என்னை உன்னிப்பாகப் பார்த்து, “நீங்கள் சியாமளா ஆண்டியின் தம்பியா?” என்று கேட்டது. நான் தலையசைத்து ஆமாம் என்றேன். பிறகு “நீ பள்ளிக்குச் செல்கிறாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆமாம், பாண்டியன் ஸ்கூலில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறேன். நான்தான் வகுப்பிலேயே டாப். கணிதத்தில் 88/100 மதிப்பெண்கள் எடுத்தேன்” என்றது.

     “நான் அவளிடம், நன்றாகப் படிக்க வேண்டும். எப்பொழுதும் இதே மாதிரி வகுப்பில் முதல் மாணவியாக இருக்க வேண்டும்’, என்று சொன்னேன். நான் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அவள், “நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். ஆனால்  நீங்கள் எங்களைப் போலவே இருக்கிறீர்கள்”, என்றாள். பிறகு, உங்களுக்கு  வயசாயிடுத்து. உங்களுக்கு ஏன் முடி வெள்ளையாக இல்லை?”, என்றாள். குழந்தைகளுக்குக் கள்ளம் கபடமே கிடையாது. மனதில் நினைப்பதை அப்படியே பேசிவிடுவார்கள். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கிறார்கள்.

     அவளுக்கு எப்படி இப்படி ஒரு யோசனை வந்தது, என்று நான் கேட்பதற்குள், பக்கத்து வீட்டுப்பெண்மணி பிளவு சுவருக்கு (Compound wall) அருகில் வந்தார். எனக்கு வணக்கம் சொன்னாள். பின்னர் சிறுமியிடம், “வீட்டுப்பாடம் நிறைய இருக்கிறது. சீக்கிரம் வா. வந்து வீட்டுப்பாடத்தைச் செய்”, என்றாள். குழந்தைகளுக்கு அம்மா தான் உலகம்.  அம்மாவைப் பார்த்ததும் குழந்தை துள்ளி குதித்துக்கொண்டுவீட்டிற்கு ஓடிவிட்டது.

     முருகேஷ் தனது ஸ்மார்ட்போனுடன் வந்து, எல்லா இடங்களிலும் இருந்த ஒரு இந்திய பிளாக்பஸ்டரை எனக்குக் காட்டினான். “ஜெர்மன் மாமா, இப்போதைய படம் எல்லாம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். பாருங்க மாமா’, என்று சொல்லி, படங்கள், விளையாட்டுகள் எல்லாவற்றையும் காட்டினான். அவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சியாக்கா சாப்பிடக் கூப்பிட்டாள்.

    அப்போதுதான், நேரம் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.  அந்த வீடு பெரியதாக இருந்தது. அதனால், வராண்டாவில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.

     கேரளாவில் பிரசித்தி பெற்ற சிவப்பு அரிசி  சாதமும், அவியலும் சாப்பிட்டோம். சமையல் பிரமாதமாக இருந்தது.  குறைந்தது ஐந்து காய்கறிகளைக் கொண்டு அவியல் பண்ணுவார்கள். இது ஒரு சைவ உணவு வகை. இதில் இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான இஞ்சி சுவையும் சேர்ந்து இருக்கும்.

பெரும்பாலும் முருங்கைக்காய், பழுக்காத மா, துருவிய தேங்காய், கத்தரிக்காய் மற்றும் உருளைகௌகிழங்கு போன்றவைகளை சேர்த்து அவியல் செய்வார்கள். முருங்கைக்காயும், கத்திரிக்காயும் பூமிக்கு மேலே வளரும். உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், கேரட் போன்றவை பூமிக்குக் கீழே வளரும். அவியலுக்குக் காய்கறிகளை நீளம், நீளமாக வெட்டுவார்கள். 

     பஞ்ச பூதங்களாகிய காற்று, பூமி, நெருப்பு, நீர் மற்றும் விண்வெளி ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டு ஒன்றாகச் சமைக்கப்படுகின்றன. பிறகு அவற்றை எல்லாம் பச்சை வாழை இலையில் விதம் விதமான  சட்னிகளுடன்  அழகாகப் பரிமாறுவார்கள். மிகவும் சுவையாகச் சமைத்திருந்தார்கள். ஆனால், மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று குறைகிறதே என்று நினைத்தேன்.

     ஆமாம். பருப்புப்பாயாசம் காணவில்லை. மஞ்சள் சாதம் பற்றிய என் எண்ணங்களிலிருந்து என்னை என் மைத்துனர் ராசப்பன் அத்தானின் குரல் திசைத்திருப்பியது. அவர் வருவதற்குள் நாங்கள் சாப்பிட்டு முடித்திருந்தோம்.

     அவர், ‘எனக்கு மாலை  தேவாலயத்தில் வேலை இருக்கிறது. கொஞ்சம் நேரமாவது தூங்கினால் தான் என்னால் வேலை செய்ய முடியும். அதனால் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதே’, என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் தனது படுக்கையறையை நோக்கிச் செல்லும்போது நான் அவரைப் பார்த்துக் கனிவாகச் சிரித்தேன்.      ஆனால் அவரது மகன் நடந்துகொண்ட விதம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. எரிச்சலாக வந்தது. 

        முருகேஷ் அலைப்பேசியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அப்போது, “உங்கள் பெரிய மாமாவைக் கொஞ்ச நேரம் நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள்ளச்சொல்.  அவர் எங்கே ஓய்வெடுக்கலாம் என்பதை அவருக்குக் காட்டு,” என்று சியாக்கா முருகேஷிடம் கூறினாள். இந்த வேலை செய்யாமல் தப்பிக்க முருகேஷுக்கு அவள் வாய்ப்பே கொடுக்கவில்லை. வேறு வழி இல்லாமல் “வாங்கோ, மாமா வாங்கோ,” என்று என்னை ஒரு குறுகிய மரப்படிக்கெட் வழியாக அழைத்துக்கொண்டு போனான்.

     இந்தியாவில் உறவினர்கள் அல்லது விருந்தினர்களுடன் குறைந்தபட்சம் ஒரு நாளாவது செலவிட வேண்டும். விடைபெறும் நேரமும் அதிகமாக இருக்கும்.

     முருகேஷ் என்னை அழைத்துக்கொண்டு போய், ’நான் தங்க வேண்டிய அறையை’ காட்டினான். விருந்தினர் அறை பெரிதாக இருந்தது. அதில் ஒரு மரக் கட்டில், ஒரு நாற்காலி, ஜன்னலோரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மரத் தட்டு, தண்ணீருடன் ஒரு மண் குடம், அதன் அருகில் ஒரு கோப்பை எல்லாமே இருந்தது. ஜன்னலிலிருந்து பார்த்தால் தோட்டமும் சரிவுகளும் அழகாக இருந்தது.

    வாழைமரம், கொய்யாமரம், மா மரம் எல்லாம் தோட்டத்தில் இருந்தது. தோட்டம் மிக அழகாக இருந்தது. பக்கத்து நிலத்தில் ஒரு சிறுவன் மாட்டைத் தொழுவத்திற்கு கொண்டு செல்ல முயன்றான். திடீரென்று மாடு வாலால் லேசாக அடித்தபோது, அவன் பயந்து விட்டான். அழுதுகொண்டே வீட்டுக்குள் ஓடினான். இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கிராமத்தில் கள்ளம் கபடம் இல்லாதவர்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. ஐரோப்பாவின் அவசர வாழ்க்கைக்கும், கிராமத்தின் சாவகாசமான வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது.

     தூங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை. என் மனதில் பல விதமான எண்ணங்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பழைய ஞாபகங்கள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதுவரை நடந்த எல்லாவற்றையும் அமைதியாக நினைத்துப் பார்த்தேன். பிறகு சுவரில் இருந்த பழைய படங்களை அருகில் போய்ப் பார்த்தேன். படங்களில் லேசாகத் தூசி படிந்திருந்தது. அந்தத் திசையில் மின்விசிறி சுழன்றபோது, சில நொடிகளுக்கு ஒருமுறை அந்த காலண்டரில் இருந்த சிவன் மற்றும் பார்வதியின் படங்களைப் பார்த்தேன். அது போன வருடத்தின் காலண்டர். அதைத்தவிர உறவினர்களின் புகைப்படங்கள் எல்லாம் நேர்த்தியாக மாட்டப்பட்டிருந்தன.

     அவற்றில் எனது உறவினர்கள் சிலரை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அவற்றில் பலர் யாரென்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால் பாரம்பரிய உடைகளையும், நகைகளின் வகைகளையும் பார்த்து ‘அவர்கள் என்னுடைய உறவினர்கள்’ என்று யூகித்துக் கொண்டேன்.

     கதவுக்கு மேலே உள்ள சுவரில், ஒரு கெக்கோ (பல்லி) இருந்தது. கெக்கோ என்றால் பல்லி. அது மெதுவாக நகர்ந்து, ஒரு பூச்சியைப் பிடிக்க முயன்றது. இந்தியாவில் ஏர் கண்டிஷனிங் இல்லாத அனைத்து வீடுகளிலும் இந்த கெக்கோக்கள் வசிக்கின்றன. நான் மீண்டும் படுத்துக் கொண்டேன். மனம் அந்த நாள் ஞாபகத்திற்குச் சென்றது.

அந்த நாள் ஞாபகம் :

      நான் பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பள்ளியில் இந்தக் கெக்கோக்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்கள்.

     நான் என்ன எழுதினேன் என்றெல்லாம் யோசித்துப் பார்த்தேன். இந்த கெக்கோக்களை வரைந்து, அதைப்பற்றி விவரமாக எழுதி வகுப்பில் இரண்டாவது மாணவனாகத் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது சிறுவனாக அப்பாவுடன் இருந்த போது நடந்த ஒரு விஷயம் என் நினைவிற்கு வந்தது.    

            அது ஒரு கோடைக்காலம். 1960 களின் முற்பகுதி. வெய்யில் அதிகமாக இருந்தது. உஷ்ணம் தாங்க முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. மின்சாரம் ஒரு நாளைக்குப் பல முறை போய் வந்து கொண்டிருந்தது.

     என் அம்மா கூரையின் கீழ் முற்றத்தில் விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தாள். அடுப்பில் உணவு கொதித்துக் கொண்டிருந்தது. நானும் என் தங்கையும் சின்னப் பிள்ளைகளாக இருந்தோம். நாங்கள் புளி விதைகளுடன் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தோம்.

    அந்த சமயம் என் அப்பா எதையோ எடுப்பதற்காக முற்றத்திற்குப் போனார். திடீரென்று அவர், ‘லீலா’ என்று என் அம்மாவைப் பதட்டத்துடன் கூப்பிட்டார். விளையாடிக்கொண்டிருந்த நாங்களும் ஓடினோம். அப்பா அந்த மாதிரி பதட்டமாகக் கூப்பிட்டு நாங்கள் பார்த்ததில்லை. அவருடையக் குரலில் பதட்டம் தெரிந்தது.

     அப்பா பானையிலிருந்த சாம்பார் சாதத்தைக் கிளறிக் கொண்டிருந்தபோது அம்மா முற்றத்துக்குள் வந்தாள். ‘எதற்குக் கூப்பிட்டீர்கள்?’, என்று அம்மா கேட்டுக்கொண்டிருந்த போது,  சூடான மண் பானையை எடுத்து அதிலிருந்த குழம்பை ஒரு மூலையில் தரையில் அப்பா  கொட்டிக் கொண்டிருந்தார். அப்பா ஏன் சமைத்ததைக் கீழே கொட்டுகிறார்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. ஏதோ ஒரு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

    என் அம்மா அருகில் வந்து, தரையில் தூக்கிக் கொட்டப்பட்ட குழம்பைப் பார்த்தாள். அது சாக்கடையில் ஓடிக்கொண்டிருந்தது.

     நானும் தங்கையும் எழுந்து நடந்தோம். காய்கறி  குழம்பில் ஒரு வெள்ளை கெக்கோ செத்துப்போயிருந்தது. நாங்கள் இருவரும் சத்தமாக, “பல்லி (கெக்கோ)” என்று கத்தினோம்.

    எங்கள் பெற்றோர்கள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, முற்றத்தைச் சுத்தம் செய்து குளித்துவிட்டு வேறு ஆடை அணியச் சொன்னார்கள். நாங்கள் குளித்துவிட்டு, ஒன்றும் சாப்பிடாமல் கணேசர் கோவிலுக்குச் சென்றோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் எங்கள் தந்தை எங்களிடம், ‘பல்லி மிகவும் விஷமானது. அது விழுந்த உணவைச் சாப்பிட்டிருந்தால் நம் உயிருக்கே கூட ஆபத்து வந்திருக்கும். விநாயகக் கடவுள் தான் நம்மைக் காப்பாற்றினார்’, என்றார்.

     ‘அந்த நேரம் பார்த்து நீங்கள் முற்றத்திற்கு வந்து பல்லியைப் பார்த்ததால் தான் நாம் எல்லோருமே தப்பித்தோம்.  ஆனால் எதை எடுப்பதற்காக அங்கே வந்தீர்கள்?’ என்று என்னுடைய அம்மா, அப்பாவிடம் கேட்டாள். பொதுவாக என் தந்தை வீட்டின் முன் வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருப்பார் அல்லது பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருப்பார். அவர் முற்றத்தின் பக்கம் எல்லாம் போக மாட்டார். எங்களைக் காப்பாற்றுவதற்காக கடவுள் தான் அவரைக் கருவியாக்கி முற்றத்திற்குப் போக வைத்திருக்கிறார்.

     அம்மாவின் கேள்விக்கு அப்பா முதலில் பதில் சொல்லவில்லை. அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நான் ஏன் முற்றத்திற்குச் சென்றேன் என்று எனக்கே தெரியவில்லை. குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை” என்றார்.

     நன்றாக யோசித்தால் எங்களுடைய பூர்வபுண்ணியமும் கடவுள் நம்பிக்கையும் தான் எங்களைக் காப்பாற்றி இருக்கிறது.

     நான் எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து பழைய நினைவுகளில் மூழ்கி அப்படியே என்னையறியாமல் தூங்கி விட்டேன். அப்போது, “டீ குடிக்க வாங்க” என்று யாரோ கூப்பிடுவதைக் கேட்டு திடுக்கிட்டுக் கண் விழித்தேன். 

     அதற்குள் முருகேஷ் கதவைத் திறந்துகொண்டு என் அருகில் வந்து விட்டான். “மாமா, டீ குடிக்கலாம், கீழே வாங்கோ”, என்றான். மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன்.

     நான் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டி இருந்தது.  குளியலறை எங்கே இருக்கிறது என்று கேட்க நினைத்தேன். என் மைத்துனன் என் நிலையைக் கண்டு நான் கேட்பதற்குள் வழி காட்டினான். வீட்டின் ஆண்களுக்கும், ஆண் விருந்தினர்களுக்கும் குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியில் தோட்டத்தில் குளியலறை இருக்கும். நான் அந்தக் குளியலறைக்குச் சென்றேன்.

     அங்கே தோட்டத்திற்குப் பாசனம் செய்யக் கிணறு இருந்தது. நான் குளிர்ந்த கிணற்று நீரில் குளித்தேன். குளித்த பிறகு தான் அப்பாடா என்று இருந்தது. மீண்டும் புதிதாகப் பிறந்தது போல் இருந்தது. . பிற்பகல் உஷ்ணம் கொஞ்சம் தணிந்திருந்தது.

     சியாக்காவும் ராசப்பன் அத்தானும் தோட்டத்தில் உள்ள தேநீர் மேஜையில் அமர்ந்திருந்தனர். இருவரும் கோவில் திருவிழா பற்றிய உரையாடலில் மூழ்கியிருந்தனர். கோவிலில் திருவிழா நடைபெறுவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளன. அவர்கள் கோவிலைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது நான் அங்கே போனேன்.

கோவில் திருவிழா :

     எல்லா கோவில்களிலும் திருவிழாக்கள் நடக்கின்றன. ஒவ்வொரு கோவில் ஒவ்வொரு விதமான சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கின்றனர். பெரும்பாலான கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் திருவிழாக்கள் நடக்கின்றன. கோவில் திருவிழாக்கள் பொதுவாகப் பல நாட்கள் நடக்கின்றன. இந்தத் திருவிழாக்களில் விழாவின் துவக்கமாகக் கோவிலில் கொடியை ஏற்றுவதும், பின்னர் திருவிழாவின் இறுதி நாளில் அது இறக்கப்படுவதும் வழக்கம். ஒவ்வொரு நாளும் கோவிலில் உள்ள இறைவனின் சிலையைத் தேரிலும், பல்லக்கிலும் வீதி உலா கொண்டு வருவார்கள். மிகவும் விசேஷமாகத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  

     நான் வருவதைப் பார்த்ததும் சியாக்கா பேச்சை நிறுத்திவிட்டு, சுக்கு டீ கொண்டு வருவதற்காக எழுந்தாள்.

     ஜெர்மனியில் ஏதாவது கோவில்கள் உள்ளதா என்று ராசப்பன் என்னிடம் கேட்டார். நான் ஹாம், ஹைடெல்பெர்க் மற்றும் பெர்லின் கோவில்களைப் பற்றிச் சொல்லவிருந்தேன். ஆனால் என்னைப் பேசவிடாமல், முருகேஷ் குறுக்கிட்டு, யூடியூப்பில் (Youtube) ஜெர்மன் ஹரே கிருஷ்ண பக்தர்களை ஹிந்து உடையில் பார்த்ததாகக் கூறினான். அவனுடைய அப்பா, அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். பிறகு டீயைக் குடித்து முடித்துவிட்டு, இரவு எட்டு மணியளவில் வீட்டிற்குத் திரும்புவதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

     மாலை நேரத்தில் மூவரும் வெளியே தோட்டத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தோம். கிராமங்களில், மாலை ஆறு மணிக்குப் பிறகு,  ஐரோப்பாவை விட வேகமாக இருட்டத் தொடங்கிவிடும். அதனால் சூரிய அஸ்தமனம் பார்க்க முடிந்தது.  அஸ்தமன சூரியன் வெளிச்சம் குறைந்துப் பார்க்க அழகாக  இருந்தார். பறவைகள் தங்களுடைய கூட்டை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் பறந்தன. பறவைகளின் சப்தம்,  எங்கோ தூரத்தில் மெதுவாக நாய்கள் குரைக்கும் சப்தம் எல்லாம் மனதிற்கு ரம்மியமாக இருந்தது.

ராசப்பன் அத்தான் அறிவித்ததை விடச் சற்று முன்னதாகவே வந்துவிட்டார். ஜெர்மனியிலிருந்து சபைத் தலைவர்கள் என்னை விருந்தினராக ஆராதனைக்கு அழைத்ததாகக் கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

     இரவு உணவிற்குச் சப்பாத்தியும், முருங்கைக்கீரைக் கூட்டும் தயாராக இருந்தது. குடிக்க, சிறிது உப்பு கலந்த நீர்த்த தயிர் இருந்தது. என் ஜெட்லாக் (Jetlag) காரணமாக நான் சாப்பிட்டதும்  தூங்கச் சென்றுவிட்டேன்.

   ஆனால் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு பார்த்தேன். என்னால் தூங்க முடியவில்லை.  அதனால், தற்போதைய இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ளப் பத்திரிக்கைகளை அலசிப் பார்த்தேன். இதமான காற்றும், தொலைதூரக் கோவிலிலிருந்து ஒலித்த மென்மையான மந்திர சப்தமும் என்னை உறங்கச் செய்திருக்க வேண்டும். என்னையறியாமல் தூங்கி இருக்கிறேன். காலையில் பிரகாசமான சூரிய வெளிச்சம் என்மேல் பட்டு என்னை எழுப்பியது.

     எனக்குப் பேச்சு சத்தமும்  சிரிப்பு சத்தமும் கேட்டது. நான் எழுந்து உட்கார்ந்தேன். அப்போது நான்கு அல்லது ஐந்து வயதுடைய இரண்டு சிறு பையன்கள் உள்ளே எட்டிப்பார்ப்பதைப் பார்த்தேன். அவர்கள், நான் பார்ப்பதைக் கண்டதும் சிரித்துக்கொண்டே ஓடிவிட்டார்கள். கீழே போகலாம் என்று எழுந்திருந்தேன்.

     நான் படிக்கட்டுகளில் இறங்கியபோது, ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் குடும்பமாக நடந்து வருவதைப் பார்த்தேன். அந்தப் பெண் நீல நிற புடவை அணிந்திருந்தாள், அவளை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.. ஆனால் யாரென்று ஞாபகம் வரவில்லை. பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த அவர்கள், நான் வருவதைப் பார்த்ததும் ஒரு கணம் மௌனமானார்கள். அப்போது அந்தப்பெண், “வணக்கம் அண்ணாச்சி, எப்படி இருக்கிறீர்கள்?”, என்றாள். அவள் குரலைக் கேட்டதும் ‘அவள் யார்?’ என்று எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. அவள் ஏதோ ஒரு விதத்தில் எனக்கு உறவு. ஐந்தாறு வருடங்களாக நான் அவளைப் பார்க்கவில்லை. போனமுறை பார்த்த போது அவள் ஒல்லியாக இருந்தாள். அப்போது தான் அவளுக்குத் திருமணமாகி இருந்தது. அவள் கணவன் என்னைப் பார்த்து அன்பாகச் சிரித்தார். அவரும் கடந்த முறை சந்தித்ததை விட குண்டாக இருந்தார். “அட, ரேஷ்மி, தங்க்ச்சி?” என்று சொல்லிவிட்டு, “உன்னை அடையாளமே தெரியவில்லை. நீ முதலில் பார்த்த மாதிரி இல்லை. இப்போது நீ நன்றாகவே மாறி இருக்கிறாய். மீண்டும் உன்னைப் பார்த்ததில் சந்தோஷமாக இருக்கிறது” என்று சொன்னேன். இவர்கள் உன்னுடைய பையன்களா? என்று கேட்டேன். அவள் கொஞ்சம் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் சின்னப்பெண். அழகாக இருந்தாள்.

     ரேஷ்மி, திருமணத்திற்கு முன்பே ‘என்னுடையக் கணவர் எனக்கு மூன்று விதத்தில் உறவு’ என்றாள். அது தான் இந்தியாவின் விசேஷம். ஒவ்வொரு மனிதனும் எங்காவது, எப்படியாவது மற்ற மனிதர்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் இந்தியாவில் வாசுதேவ குடும்பகம் என்று சொல்கிறார்கள். இந்த வார்த்தையில் வாசுதா (பூமி), ஏவா (இது இப்படித்தான்) மற்றும் குடும்பகம் (ஒரு குடும்பம்) ஆகிய மூன்று சொற்களைக் கொண்டுள்ளது. இந்த பூமியில் நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்கிறோம், என்பது தான் இதன் பொருள்.

     நான் காலை எழுந்ததும் எனது காலை யோகா பயிற்சியை முடித்தேன்.  பிறகு குளிர்ந்த நீரில் குளித்த பிறகு, நான் மீண்டும் கீழே சென்றேன். எனக்கு வழக்கமான தென்னிந்தியக் காலை உணவான இட்லி மற்றும் சாம்பார் ஏற்கனவே தயாராக இருந்தது. மற்றவர்கள் ஏற்கனவே சாப்பிட்டு முடித்துவிட்டதால், நான் தனியாகக் காலை உணவைச் சாப்பிட்டேன்.      தனியாகச் சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனால் சாப்பிடக் கொடுத்துவிட்டு, அதை ரசித்துச் சாப்பிட முடியாமல் அவர்கள் அனைவரும் இதைப் பற்றியும், அதைப் பற்றியும் என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எப்படி உணவை ரசித்து சாப்பிட முடியும்?   ‘இன்னொரு வடை வேண்டுமா?’ என்று சியாமளா அக்கா கேட்டாள். நிச்சயமாக நான் ‘இன்னொரு வடை வேண்டும்’ என்று சொல்ல  விரும்பினேன். நான் சொல்வதற்குள் திடீரென்று ஒரு பெரியம்மா வேறு இரண்டு பேருடன் வந்தார்கள்.  அவர்கள் வந்த உடனே, அவர்களுக்குச் சமையலறையில் இடம் ஒதுக்கினார்கள். அங்கே இருந்த தட்டு மற்றும் மேஜை சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் உட்கார்ந்து வேலை செய்ய ஒரு நாற்காலியை கொண்டு வந்தார்கள். என் வடைக்கு என்ன ஆயிற்று என்று யோசித்தேன். அவர்கள் வேலை பளுவில் வடையை மறந்து விட்டார்கள்.      

சமையல் ஏற்பாடுகள் :

அந்த பெரியம்மாவிடம் முதலில் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

     சியாமளா அக்கா எங்களை தோட்டத்திற்குப்போய் பேசிக்கொண்டிருக்கச் சொன்னாள். மஞ்சள் அரிசி உணவைத் தயாரிக்க அவளுக்குச் சமையலறை தேவைப்பட்டது. வழக்கம் போல், சமையலறையில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. சமையலறைக்கு சம்மந்தமில்லாதப் பல விஷயங்கள் அங்கே விவாதிக்கப்படுகின்றன.  இங்கே, பெண்கள் தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள், இந்த இடத்தில் திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.  பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் சுவையான உணவும் பக்கத்தில் தயாரிக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் சமையலும் ஆகும். நல்ல விஷயங்களும் நடக்கும்.

     சியாமளா அக்கா சொன்ன மாதிரி நாங்கள் தோட்டத்திற்கு வந்துவிட்டோம். அங்கே என்னுடைய அத்தை வந்தாள். “உன் குழந்தைகளுக்குத் தமிழ் பேசவும், எழுதவும் சொல்லிக்கொடு. நம் சம்பிரதாயங்களை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லிக்கொடு”, என்று அவசரமாகச் சொல்லிவிட்டு சமையலறைப் பக்கம் போய்விட்டாள். என் குழந்தைகள் ஐரோப்பாவில் வசிக்கிறார்கள் என்பதிலும், என் மனைவி ஐரோப்பியர் என்பதிலும் அவளுக்கு ஆர்வம் இல்லை. ஏதோ பேச வேண்டும். அவ்வளவு தான்.

அதற்குள் விருந்துக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. பெண்கள் மீண்டும் சமையலறையில் மறைந்தனர். அவர்கள் இது போன்ற குடும்பக் கூட்டங்களில், குடும்பங்கள் மற்றும் கொண்டாட்டங்களைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. சமையல் குறிப்புகளைப்பற்றிப் பேசுகிறார்கள். அவரவர் கடமைகளைப்பற்றிப் பேசுகிறார்கள். எப்போதும் இனிமையாகப் பேசிக்கொண்டு வேலையின் பளு தெரியாமல் செய்து முடித்துவிடுகிறார்கள். இது தான் இவர்களின் சிறப்பு.

     கடிகார முட்கள் வேகமாகச் சுற்றிவிட்டது.  சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. சமையலறையிலிருந்து வெங்காயம் வதக்கும் வாசனை, மசாலா வாசனை எல்லாம் தோட்டத்திற்கு வந்தது. சுவையான உணவுகளின் வாசனை பசியைத் தூண்டியது.

     வெளியே மூன்று பெஞ்சுகள் போட்டார்கள். இலைகளால் செய்யப்பட்டத் தட்டுகளைச் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்தனர். பின்னர் நெய்யில் சமைத்த பல்வேறு கறிகளுடன் மஞ்சள் சாதமும் இருந்தது. நான் கொண்டு வந்திருந்த டோபியா-கா சிப்சும், காஷ்மீர் ஆப்பிள்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

     சியாக்கா இரண்டு முறை ‘நல்ல தரமான பொருள்களை வாங்கி வந்திருக்கிறாய் என்றும், தமிழில் கடிதங்கள் எழுதும் பழைய முறையை நான் மறக்கவில்லை’, என்றும் என்னைப் பாராட்டினாள். எனக்கு மனநிறைவாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.

     சூரியன் மறைந்து சந்திரன் வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அந்த மறக்க முடியாத நாள் முடிவுக்கு வந்தது. மாலையில், நாங்கள் நால்வரும் மொட்டைமாடியில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தையும், மெதுவாக உதயமாகும் முழு நிலவையும் பார்த்துக்கொண்டிருந்தோம். விருந்துக்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராகத் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். கலகலப்பாக இருந்த இடம் வெறிச்சோடி இருந்தது. எங்களுடைய மனம் பாரமாக இருந்தது.

மோட்டர் சைக்கிள் விபத்து :

மறுநாள் காலை உணவுக்குப் பிறகு, முருகேஷ் தனது அழகான மோட்டார் சைக்கிளை என்னிடம் காட்ட விரும்பினான். நான் ஆர்வத்துடன் பார்த்தேன். பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்திருக்க வேண்டும்.  முருகேஷ் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்கச் சொன்னான். என்னால் மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியாது, என்று சொன்னாலும் கேட்கவில்லை.  “இது ரொம்ப ஈஸி மாமா, பெடல் செய்யாமல் சைக்கிள் ஓட்டுவது போல் தான்”, என்று என்னிடம் கூறினான். அவன் ஆசைப்படுகிறானே என்கிறக் காரணத்தினால் அந்த  முட்டாள்தனத்திற்கு உடன்பட்டேன். நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று அதற்காக இன்றும் வருத்தப்படுகிறேன். அவனை வருத்தப்பபட வைக்கக்கூடாது என்பதற்காக நான் பைக்கில் அமர்ந்தேன். அவன் அங்கேயே நின்று கிக்-ஸ்டார்டரை அழுத்தினான். ஒரு பள்ளி பேருந்து எங்களுக்கு அருகில் சென்றது. நாங்கள் மோட்டார் சைக்கிளுடன் சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்ததால், பேருந்து ஓட்டுநர் ஹார்ன் அடித்து, அவர் கடந்து செல்லும் போது திட்டிவிட்டுப் போனார். அந்தக்குரல் எனக்கு இன்றும் கேட்கிறது.

     முருகேஷ் இப்போது கிளட்சை அழுத்தி பின்னர் கைப்பிடியை லேசாக விடுங்கள் என்று எனக்கு விளக்கினான். அவன் அதற்கு மேல் சொன்ன எதுவும் எனக்குக் கேட்கவில்லை.  ஏனென்றால் திடீரென்று கண் மூடிக்கண்திறப்பதற்குள்  அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. க்ளட்சை விட்ட உடனே, முன் சக்கரம் எகிறி பைக் முன்னோக்கிச் சென்றது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. நான் என் கால்களைத் தரையில் அழுத்தி வண்டியை நிறுத்த முயற்சி செய்தேன். அதற்குள் வண்டி எகிறி விட்டது. நான் சாலையோரம் தூக்கி எறியப்பட்டேன். வண்டி சாக்கடையில் போய் விழுந்தது.

      தரையில் விழுந்த வேகத்தில் உடம்பில் உள்ள நரம்பெல்லாம் உடைந்திருக்கும். அவ்வளவு தான். எல்லாம் போச்சு என்று நினைத்துவிட்டேன். மெதுவாகக் கையை அசைத்துப் பார்த்தேன். அசைக்க முடிந்தது. மெதுவாகக் காலை அசைத்துப் பார்த்தேன். கால் நன்றாக இருந்தது. ஒன்றும் ஆகவில்லை. படபடப்பை காட்டிக்கொள்ளாமல் எழுந்து நடந்தேன். நடக்க முடிந்தது. கடவுளே, காப்பாற்றிவிட்டாய் என்று மனதிற்குள் நன்றி சொன்னேன். என் முட்டாள்தனத்தை நினைத்து நானே வருத்தப்பட்டேன். எனக்கு என் மேலேயே கோபம் வந்தது. விபரீதமாக ஏதாவது நடந்திருந்தால் என் நிலைமை என்னவாகி இருக்கும்? நினைக்கவே பயமாக இருந்தது. அப்போது சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வந்தது.

     எங்களுக்குத் திருமணமான புதிதில், எல்லா இளம் ஜோடிகளைப்போல நாங்களும் சந்தோஷமாக இருந்தோம். அதிலும் நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். சந்தோஷத்தை வார்த்தையில் சொல்லி விட முடியுமா என்ன?

     ஒருவரை ஒருவர் கிண்டலடிப்பது, ஊர் சுற்றுவது, அர்த்தமே இல்லாமல் பேசிச் சிரிப்பது என்று எதைச் சொல்வது? எதை விடுவது? Sweet nothings. மறக்க முடியாத நினைவலைகள்.

      ஒரு நாள் தேநீர் குடிக்கும் சமயம் சோபாவில் உட்கார்ந்து ஜோக்கடித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.   நான் அவளைக் கேலி செய்து கொண்டிருந்தேன். பதிலுக்கு அவள் என்னைக் கிண்டலடித்துச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். நாங்கள் இருவரும் சந்தோஷமான மனநிலையில் இருந்தோம்.

      நாங்கள் ஒருவரை ஒருவர் விளையாட்டாக அடித்துக்கொண்டும், குத்திக்கொண்டும் சோபாவிலிருந்து தரையில் விழுந்தோம். விளையாட்டு வினையாகும் என்று சொல்வார்கள். அது எங்கள் விஷயத்தில் உண்மையாகி விட்டது.

     நான்  கீழே விழ, என் மனைவி என் மேல் விழுந்தாள். நான் ‘ஆ’ என்று அலறினேன். என் மனைவி பயந்து,  ‘என்ன ஆயிற்று?’ என்றாள். என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

     என் கையை அசைக்க முடியவில்லை. தோள்பட்டையில் பயங்கரமான வலி. என்னுடைய இடது தோளின் மூட்டு நழுவி இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. என்னால் கையை தரையில் ஊன்றி எழுந்திருக்க முடியவில்லை. அவள் என்னை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு, எழுந்து நிற்க உதவினாள்.

      எனக்கு வலி அதிகமாக இருந்தாலும் பயப்படவில்லை. ஆனால் என் மனைவி பதறிவிட்டாள். அவள் உடனடியாக சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்கள் குடும்ப மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றாள். அங்கு பல நோயாளிகள் காத்திருந்தனர். ஆனால் அவள் நேராக டாக்டர் அறைக்குள் ஓடிப்போய், ‘என் கணவரால் கையை அசைக்க முடியவில்லை. வலி தாங்காமல் துடிக்கிறார். உடனே வந்து பாருங்கள், அவசரம்’ என்று சொன்னாள்.

     அதனால் டாக்டர் என்னைப் பார்க்க வெளியில் வந்தார். என் மனைவி மிகவும் படபடப்பாக இருந்தாள். வேகம் வேகமாக ஸ்வாபியன் (Swabian) மொழியில் பேசினாள். நாங்கள்  ஃபிராங்க்ஃபர்ட்டில் (Frankfurt) இருந்தோம். அது வேறு ஒரு மாநிலம். அவர்கள் ஸ்வாபியன் பேச மாட்டார்கள். அதனால் என் மனைவி பேசிய எதுவும் டாக்டருக்குப் புரியவில்லை.

      நான் அவளை அமைதிப்படுத்தினேன். “ஒன்றும் இல்லை, இதற்கு இவ்வளவுப் பதட்டப்படாதே”, என்று என் மனைவியிடம் சொல்லிவிட்டு, அவள் சொன்னதை எல்லாம் டாக்டருக்கு நான் உயர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தேன்.     டாக்டரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு இளம் பெண் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிற காரணத்தினால்,  ஒரு இந்தியர் மொழிபெயர்த்து சொல்கிறார் என்று டாக்டர் நினைத்திருக்கலாம். நான் தான் அடிபட்டவன் என்று தெரிந்து கொள்ள டாக்டருக்கு சிறிது நேரம் ஆயிற்று. அந்த அளவிற்கு நான் தைரியமாக இருந்தேன்.

     பிரச்சனை எனக்குத் தான் என்று தெரிந்த உடன், அவர் அன்புடன் என்னைப் படுக்கச் சொன்னார்.  என் தோளுக்குச் சிகிச்சை அளித்தார். பிறகு தோள்பட்டை  மூட்டை  நன்றாக உருவி, மீண்டும் அதன் இடத்திற்குக் கொண்டு வந்து, தோள்பட்டையில் கட்டு கட்டினார். அந்த நேரம் வலியை பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கிக்கொண்டேன்.

     அவர் எங்களிடம் கண்டிப்பாகவும், நகைச் சுவையாகவும், ‘குணமாகும் வரை எந்த விளையாட்டும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

     அது ஒரு சிறிய கிளினிக். டாக்டர் சொல்வதைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.

அப்போதிலிருந்து, “என்னை ஆஸ்பத்திரிக்குப் போகும் அளவிற்கு செய்து விட்டாயே. எல்லாவற்றுக்கும் நீ தான் காரணம்”,  என்று சொல்லி அவளை அடிக்கடி கேலி செய்து கொண்டிருந்தேன். உண்மையில் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். இவை எல்லாம் சுகமான அனுபவங்கள். ஆனாலும், எல்லாவற்றையும் Accept life as it comes என்று சொல்லக்கூடிய பக்குவத்தை எனக்குக் கடவுள் கொடுத்திருந்தார்.

     நடந்து முடிந்ததை மாற்ற முடியாது. நடக்கப் போவதை யோசித்தால் மனதில் பாரம் இருக்காது. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்.     அப்போது  ராசப்பன் அத்தான் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது, நானும் முருகேசும் நின்று கொண்டிருந்ததையும், மோட்டார் பைக் பள்ளத்தில் இருப்பதையும் பார்த்தார். முருகேஷ் அதிர்ந்துவிட்டான். இப்படி ஆகும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை.

ராசப்பன் அத்தான் பக்கத்து வீட்டுக்காரரிடம், “தப்பித்தது தம்புரான் புண்ணியம் என்று சொல்வார்கள். உண்மையில் பெரிதாக எதுவும் அடிபடாமல் தப்பித்தது பெரிய அதிசயம். இவ்வளவிற்குப் பிறகும் சுரேஷ் யாரையும் குறை சொல்லவில்லை. சிரித்துக்கொண்டிருக்கிறார். இதற்கு மனோபலம் வேண்டும்”,  என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

     நான் உண்மையில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருந்தேன். லேசாக சிராய்த்திருந்தது.  எலும்பு முறிவோ அல்லது ரத்த காயமோ எதுவும் இல்லாமல் தப்பித்தேன். ஆனால் அன்று இரவு என்னுடைய நிலைமை மோசமாக இருந்தது. உடம்பெல்லாம் பயங்கர வலி. என்னால் ஒரு பக்கத்தில் மட்டுமே படுக்க முடிந்தது. மறு பக்கம் திரும்ப முடியவில்லை. கழிப்பறைக்குச் செல்வது நரகமாக இருந்தது. மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுக்க முடிவு செய்தேன்.

 மருத்துவமனையில், தசைப்பிடிப்பு என்றார்கள். இதற்கு சித்த வைத்தியம் தான் சிறந்த மருந்து என்றார்கள். ஒரு சித்த வைத்தியர் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

என்னுடன் முருகேஷ் தான் மருத்துவமனைக்கு வந்திருந்தான். இந்த சித்த வைத்தியர்கள் எங்கே இருப்பார்கள் என்று சரியாகத் தெரிந்து, டாக்ஸியில் என்னை அழைத்துச் சென்றான். அந்த டாக்ஸி டிரைவர் முருகேஷுக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்பதால், விபத்து எப்படி நடந்தது  என்று எல்லாம் பேசிக்கொண்டு வந்தனர்.

சித்த வைத்தியம் :

  ஒவ்வொரு நாட்டுக்கும் பாரம்பரிய மருத்துவம் என்று ஒன்று உண்டு. ஆங்கில மருத்துவத்தின் வருகைக்கு முன்னர் நம் நாட்டில் அனைத்து நோய்க்குமான தீர்வு சித்த மருத்துவம் சார்ந்தே இருந்தது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று ஒரு பாடல் இருக்கிறது. அதையே நாம் சிறிது மாற்றி என்ன இல்லை நம் சித்த வைத்தியத்தில் என்று சொல்லலாம்.

       சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் வேர் முதல் விதை வரை உபயோகப்படுத்தி மருந்து தயாரிக்கிறார்கள்.  இரும்பு, வெள்ளி, தங்கம் போன்ற தாதுப்பொருட்களை உபயோகப்படுத்தி மருந்து தயாரிக்கிறார்கள். நண்டு, மீன் போன்ற சீவப் பொருட்களை வைத்து மருந்து தயாரிக்கிறார்கள். பலவிதமான எளிமையானப் பொருட்களிலிருந்து மருந்துகளைத் தயாரித்து நோய் நீக்கும் சிறப்பு சித்த மருத்துவத்திற்கு உண்டு.

சித்த வைத்தியத்திற்கு நல்லப்பலன் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சித்த மருத்துவரைப் பார்த்தோம். நடந்த எல்லாவற்றையும் கேட்ட சித்த வைத்தியர், ‘இவன் ஒரு துணிச்சலான பையன்’ என்று சொல்லிவிட்டு, என்னைப் பரிசோதித்தார். எனக்கு எப்படி வைத்தியம் பண்ண வேண்டும்  என்று மசாஜ் செய்பவர்களுக்கு விரிவான அறிவுரைகளை வழங்கினார். அவர்களில் ஒருவருடைய முகம் கடுமையாக இருந்தது.  அவர் நடந்துகொண்ட விதமும் சரியாக இல்லை. அதனால் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.

    அவர்கள் ஒரு தங்க நிற மூலிகையை எடுத்து நன்றாகத் தேய்த்தார்கள். அந்த மூலிகை  எண்ணெய் நல்ல வாசனையாக இருந்தது. ஹீலர் அதிகம் பேசாமல் உதவியாளர்களுக்கு மட்டும் அறிவுரைகளை வழங்கினார். அவர்கள் நன்றாக அழுத்தித் தேய்த்தார்கள். எனக்கு வலித்தது. அது குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதி என்று எனக்குத் தெரிந்தாலும், அதைத் தாங்கிக்கொள்ளக் கடினமாக இருந்தது.  இறுதியில் என் உடம்பில் இருந்த எண்ணெய்யைத் துடைத்தார்கள். எனக்குப் பிடிக்காத ரஃபியன், என்னை எழுந்திருக்கச் சொன்னார். பிறகு உட்காரச் சொன்னார். நான் பெருமூச்சு விட்டு நிமிர்ந்தேன். பிறகு அவர் ஒரு விசித்திரமான ஸ்லாங்கில் ஏதோ சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏதாவது திட்டுகிறாரா? இல்லை எதுவும்  “குறை சொல்லாதே” என்று சொன்னாரா? ஒன்றும் புரியவில்லை. நான் எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அந்த இடத்திலிருந்து வெளியேறினால் போதும் என்ற உணர்வு மட்டும் தான் எனக்கு இருந்தது. “ஒரு நிமிடம் கூட என்னால் இனி இங்கே இருக்க முடியாது” என்று நினைத்தேன். மெதுவாக வெளியில் வந்தேன். என்னால் நடக்க முடிந்தது.

    முருகேஷ் சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்தான். தன்னை மறந்து டாக்சி டிரைவருடன் பேசிக்கொண்டிருந்தான். நான் சாலையின் குறுக்கே நடந்து செல்வதைக் கண்ட டாக்ஸி டிரைவர், ‘உதவியாளர் இல்லாமல் என்னால் சாதாரணமாக நடக்க முடியுமா?’ என்று ஆச்சரியத்துடன் முருகேஷிடம் கேட்டார். முருகேஷ் திரும்பிப் பார்த்து வியப்புடன், “மாமா, நீங்கள் மீண்டும் நடக்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது” என்றான். அவனுடையக் குரலில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தெரிந்தது. அவன் விரைவாக என்னிடம் ஓடி வந்து, ஆதரவிற்காகத் தனது கையை வழங்கினான். நான் நன்றாக இருக்கிறேன் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. எனக்கும் ஒருவிதத்தில் பிரமிப்பாக இருந்தது. எப்படி இருந்தாலும், எனது இடுப்பு மற்றும் கால்களை மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க விரும்பினேன். அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அவர்கள் X ray எடுக்க மாட்டேன் என்றார்கள். ஆனால் நான் பணம் கொடுக்க முன்வந்த உடனே, அவர்கள் உடனடியாக எனக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள். கடவுளுக்கு நன்றி, எலும்பு முறிவு எதுவும் இல்லை. இருப்பினும், அன்று மாலை மீண்டும் வலி வந்தது. இரவைத் தாண்டக் கடினமாக இருந்தது. இரவு வலி இருந்தாலும், தாங்கக்கூடியதாக இருந்தது. சியாக்கா மிகவும் கவலைப்பட்டாள். ஆனால் தன் கவலையை என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை. அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவள் முகம் காட்டியது. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நன்றாக இருக்கிறேன் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னேன். அதற்குப்பிறகு ஒரு நாள் சியாமளா அக்காவுடன் தங்கினேன். “கவலைப்படாதேக்கா. எல்லாம் சரியாகி விட்டது. சீக்கிரம் என் கால் சரியாகிவிடும்”, என்று அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, அவர்கள் வீட்டிலிருந்து விடை பெற்றேன்.

நான் மற்ற உறவினர்களைப் பார்த்த போது, எனது மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், நான் எல்லாவற்றையும் அவர்களுக்கு விரிவாகக் கூற வேண்டியிருந்தது, மேலும் அக்கம் பக்கத்தினரும் நடந்ததை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

 உறவினர்களின் அறிவுரை : என் வாழ்க்கையில் ஒரு பெரிய கண்டத்திலிருந்து நான் தப்பி இருக்கிறேன் என்றும், அதற்காக நான் சிவன் கோவிலில் ஒரு பூஜை செய்து என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினார்கள். நான் அவர்களின் வாழ்த்துக்களுக்கும், பரிந்துரைகளுக்கும் நன்றி தெரிவித்து, வழியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்வதாக உறுதியளித்தேன். சிவன் கோவிலுக்கும் போக வேண்டும். என்றார்கள். நானும் சரி என்றேன். அவர்கள் காட்டிய அன்பு மனதிற்குச் சந்தோஷமாக இருந்தது. 

 முடிவுரை :

     இந்தியாவில் மறக்க முடியாத விஷயம் விருந்தோம்பல். இதை ஆங்கிலத்தில் hospitality என்று சொல்வார்கள்.

     “இட்டுக் கெட்டவர் யாரும் இல்லை” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவிற்கு தானமும் தர்மமும் தலை காக்கும். அந்த வகையில்  உணவளிக்கும் உயரிய குணம் இந்திய வரலாற்றில் தமிழ் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிறது.  

       திருவள்ளுவர், “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” என்கிறார்.  அதாவது வீடு தேடி வருகின்ற விருந்தாளிகளையும்,  நண்பர்களையும், உறவினர்களையும் மகிழ்வோடு இருகரம் கூப்பி வரவேற்கவேண்டும் என்கிறார்.

    நம் வீட்டிற்கு விருந்தாளி வருகிறார் என்றால், அவரை வாசலுக்கே வந்து சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். பிறகு அவர்களுக்கு கை கால்களைக் கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவர்களை நலம் விசாரித்து உட்காரச்சொல்லி , முதலில் குடிக்கக் காபி, டீ அல்லது மோர் ஏதாவது கொடுக்கவேண்டும்.

அதற்குப்பிறகு நன்றாகச் சமைத்து வாழை இலையில் நேர்த்தியாகப் பரிமாற வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு கை கழுவத் தண்ணீர் கொடுத்துவிட்டு எச்சில் இலையை உணவு சமைத்தவர்களே எடுக்க வேண்டும். பின்பு சிறிது நேரம் அவர்களுடன் அன்பாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்க வேண்டும். இப்படித்தான் விருந்தினர்களை உபசரிக்க வேண்டும்.

   “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நுல்விருந்து வானதவர்க்கே”   

என்கிறது திருக்குறள்.

அதாவது வந்த விருந்தினர்களை அன்பாக கவனித்து அனுப்பி விட்டு அடுத்து வரப்போகும் விருந்தினர்களுக்காகக் காத்திருப்பார்களாம். அத்தகைய நல்லப் பண்புகளை உடையதே நம் நாடு.

     எங்கள் குடும்பம் அன்பு, பண்பு, பாசம், விருந்தோம்பல் எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்கியது. அந்த தர்மம் தான் என்னைப் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

     அந்த வகையில் என் சியாமளா அக்காவின் வீட்டில் நான் தங்கி இருந்த நாட்களும், அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்ட விதமும் மறக்க முடியாத ஒன்று. அவர்களுடைய வரவேற்பும், உபசரிப்பும் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இவ்வளவு நல்ல உறவுகளை எனக்குக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

வணக்கம்

சுப்ரமணிய சுரேஷ்

ஷ்டுட்கார்ட் , ஜெர்மனி

For reading this in English, click the link below:

http://blog.suresh.de/virumthombal-hospitality/

To get a Tamil printed edition, click the link below:

https://store.pothi.com/book/subramaniya-suresh-virumthombal/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Creative Commons License
Except where otherwise noted, the content on this site is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.